புதுச்சேரியில் ராஜிவ் சிலைக்கு செருப்பு மாலை: காங்.-வி.சிறுத்தைகள் மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

தட்டாஞ்சாவடியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலையின் கையில் இன்று காலை யாரோ விஷமிகள் ஒரு ராஜீவ் காந்தி படத்தை மாட்டினர். அந்தப் படத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு காங்கிரசார் ஆத்திரமடைந்தனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், எம்எல்ஏ தியாகராஜன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர்.

ராஜீவ் காந்தியை அவமதித்தவர்களை இந்த அரசு சும்மா விடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.

இந்தச் செயலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

அதே போல கடலூர்-விழுப்புரம் சாலையில் சுதேசி மில் அருகே, காங்கிரஸ் கவுன்சிலர் ராஜன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.

அப்போது சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது விடுதலைச் சிறுத்தைகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரசார் கோஷமிட்டனர்.

இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறிது தொலைவில் உள்ள பான்டெக் ஷோரூம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

காங்கிரசாரும், விடுதலைச் சிறுத்தைகளும் அருகருகே ஒருவருக்கு ஒருவர் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் திடீரென வாக்குவாதத்தில் இறங்கினர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் காங்கிரசார் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரின் கை உடைந்தது, அகிலன் என்பவரின் மூக்கு உடைக்கப்பட்டது. மேலும் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து பதிலுக்கு காங்கிரசாரும் தாக்கவே அங்கு பெரும் பீதி நிலவியது. போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரஹ்மான் என்பவர் வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.