ஓபாமா நாளை பதவியேற்பு-விழாவில் பெண் புரோகிதர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவியேற்ற பின்னர் நடைபெறவுள்ள தேசிய பிரார்த்தனை நிகழ்ச்சியில், இந்து பெண் புரோகிதர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பாரக் ஓபாமா நாளை பதவியேற்கவுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 750 கோடியை பதவியேற்பு விழாவுக்காக இறைத்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. ஓபாமாவுடன் அவரது புதிய அமைச்சர்களும் நாளையே பதவியேற்கவுள்ளனர்.

ஓபாமாவின் பதவியேற்பைக் காண தலைநகர் வாஷிங்டனில் மக்கள் குவிந்துள்ளனர்.

பதவியேற்பு விழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மிகவும் சவாலானவை.

அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும்.

இந்த சவால்களை சமாளிக்க ஒரு மாதம் ஆகலாம். அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகள் கூட ஏற்படலாம் என்றார்.

பதவியேற்ற பின் 21ம் தேதி தேசிய பிரார்த்தனை சேவை என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 6 மாதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் புரோகிதர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

அவரது பெயர் டாக்டர் உமா மைசூர்கர். வட அமெரிக்க இந்து கோவில் சபையின் தலைவராக உமா உள்ளார். தேசிய பிரார்த்தனை நிகழ்ச்சியில், சிறப்பு வழிபாட்டை அவர் நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் மத சுதந்திரம், சகிப்புத்தன்மையை நிரூபிக்கும் வகையில் இந்த பல் மத பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதவியேற்பு விழாக் கமிட்டி தெரிவித்துள்ளது.

உமா மைசூர்கர், மகப்பேறு மருத்துவர் ஆவார். நியூயார்க்கில் உள்ள கணேசர் கோவிலை நிர்வகித்து வருகிறார். 1977ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்த கோவில் நிறுவப்பட்டது. வட அமரிக்காவின் முதலாவது இந்து கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் வாஷிங்டன் அதிபர் பதவியேற்றபோது தொடங்கப்பட்ட வழிபாட்டு முறைதான் இந்த தேசிய பிரார்த்தனை சேவையாகும். அன்று முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கும் அடுத்த நாள் இந்த தேசிய பிரார்த்தனை சேவை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் உள்ள நேஷனல் கதீட்ரலில் இந்த சேவை நடைபெறும்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் மேற்கொள்வர்.

ரயிலில் வந்தார் …

முன்னதாக தனது குடும்பத்தினருடன் ரயில் மூலம் வாஷிங்டனுக்கு வந்து அனைவரையும் அசரடித்தார் ஓபாமா.

இதற்காக 1776ம் ஆண்டு அமெரிக்க சுதந்திர போராட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்ட நகரான பிலடெல்பியாவுக்கு சென்றார். அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 220 கி.மீ. தொலைவில் உள்ள வாஷிங்டனை வந்தடைந்தார்.

1861ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு இங்கிருந்துதான் ரெயிலில் வாஷிங்டன் சென்றார். லிங்கன் வழியில், ஒபாமாவும் பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டன் சென்றார். அவருடன் அவர் மனைவியும் பயணம் செய்தார்.

ஓபாமாவின் இந்த ‘நாஸ்டால்ஜியா’ ரயில் பயணத்தை பெரும் திரளான அமெரிக்கர்கள் வழி நெடுக கூடியிருந்து கையசைத்து வாழ்த்தினர்.

பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தாமதமானது.

வில்மிங்டன் நகருக்கு ரயில் வந்தபோது, அங்கு துணை அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பிடேன் (இவர் இந்த ஊரைச் சேர்ந்தவர்) தனது மனைவியுடன் ரயிலில் ஏறிக் கொண்டு, ஓபாமா தம்பதியுடன் பயணித்தார்.

வாஷிங்டன் ரயில் நிலையத்தில் ஓபாமா மற்றும் பிடேன் தம்பதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.