ராஜிவ் சிலையில் ராஜபக்ஷே உருவ பொம்மை: புதுச்சேரியில் காங்கிரசார் கொந்தளிப்பு

புதுச்சேரி: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ராஜிவ் காந்தியின் சிலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் காங்கிரஸ் கட்சியினர் கொதிப்படைந்தனர்.புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் ராஜிவ் காந்தியின் சிலை உள்ளது. இச்சிலையின் கையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவபொம்மை நேற்று தொங்கிக் கொண்டிருந்தது. உருவ பொம்மையின் கழுத்தில் இரண்டு ஜோடி செருப்பு, துடைப்பம் மாலையாக போடப்பட்டிருந்தன.

இந்த பொம்மையை தூக்கில் தொங்க விடுவது போல சிலையின் கையில் கட்டியிருந்தனர்.உருவ பொம்மையில், “தமிழ் வாழ்க, இனவெறியன் ராஜபக்ஷே நாயே ஒழிக, சிங்கள இனவெறி நாயே ஒழிக, இனி தொடரும் புது போராட்டம்’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலை அருகில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காலை 7.15 மணிக்கு சிலையில் தொங்கவிடப்பட்டிருந்த உருவ பொம்மையை போலீசார் அகற்றினர். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.

ராஜிவ் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்யக் கோரி, காங்., தொண்டர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் நேற்று காலை 10.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நடத்திய காங்., தொண்டர்கள் மீது, “மர்ம’ கும்பல், காலை 10.40 மணிக்கு, கற்கள், தடி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அலறியடித்து ஓடினர். இதனால் பதட்டம் நிலவியது. மறைமலையடிகள் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.