சீமான், கொளத்தூர் மணி.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.