முலாயம்-கல்யாண் சிங் திடீர் சந்தி்ப்பு: பாஜக கலக்கம்

டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், உ.பி. முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங்கும் டெல்லியில் திடீரென சந்தித்துப் பேசியது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரும் என்ற நிலை உள்ளது. இதையடுத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கூட்டணிகளை அமைப்பதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

பாஜக, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒருபடி மேலே போய் வேட்பாளர்களையே அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

இடதுசாரிகள், தேசிய அளவில் வலுவான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராந்தியக் கட்சிகளும், யாருடன் சேர்ந்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற அரசியல் கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதுவரை 51 தொகுதிகளுக்கான வேட்பாளரை அது அறிவித்து விட்டது.

மேலும், லக்னெள தொகுதியில் நடிகர் சஞ்சய் தத் போட்டியிடுவார் எனவும் அது அறிவித்துள்ளது. இது, சமாஜ்வாடியின் லேட்டஸ்ட் கூட்டாளியான காங்கிரஸை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையே முடியாத நிலையில் சமாஜ்வாடி தனது இஷ்டத்திற்கு வேட்பாளர்களை அறிவித்து வருவதை அது விரும்பவில்லை. மேலும், சஞ்சய் தத்தையும் அது பறித்துக் கொண்டது காங்கிரஸை கோபமடைய வைத்துள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று டெல்லியில் முலாயம் சிங் யாதவை, பாஜக துணைத் தலைவரும், முன்னாள் உ.பி முதல்வருமான கல்யாண் சிங் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரமும் இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

வழக்கம் போல அமர்சிங்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்தார். அவரது ஏற்பாட்டின் பேரில்தான் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு பல சந்தேகங்களையும், ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் சிங், அத்வானியின் தீவிர எதிர்ப்பாளர். இடையில் பாஜகவிலிருந்து பிரிந்து ராஷ்ட்ரீய கிராந்தி தள் என்ற கட்சியை நடத்தினார். அது முடியாததால், மீண்டும் பாஜகவுக்கே திரும்பி வந்தார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான கல்யாண் சிங், தனிக் கட்சி நடத்தியபோது முலாயமுடன் கூட்டணி வைத்திருந்தார்.

எனவே இந்த சந்திப்பு பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் சிங் மீண்டும் புதுக் கட்சி தொடங்கப் போகிறாரா அல்லது சமாஜ்வாடியில் இணையப் போகிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதில் ஏதாவது ஒன்று நடைபெறும் என பாஜக வட்டாரத்திலேயே உறுதியாக பேசப்படுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், ஆறு மாதங்களாகவே கட்சிக்கு எதிராக கல்யாண் சிங் விமர்சனம் செய்து வருகிறார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி முலாயம் சிங்கை சந்தித்தது உறுதியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாக்பூரில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்துக்கு முன்பாகவே இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

ஏற்கனவே உ.பி. மாநிலம் எடா லோக்சபா தொகுதியில் கல்யாண் சிங் போட்டியிடுவார் பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்யாண் சிங், முலாயமை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.