1200 பாலஸ்தீனர்களை பலிகொண்டபின் இஸ்ரேல் ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்தம்

ஹமாஸ் ஏற்க மறுப்பு

காஸா மீதான தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள இஸ்ரேல் நேற்று ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸாப் பள்ளதாக்கிலுள்ள ஹமாஸ் போராளிகளுக்கெதிராக கடந்த மூன்று வாரங்களாக முழு அளவிலான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது.

இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதலை மேற்கொண்டு வரும் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டிருப்பதுடன் தமது இலக்கை தாம் அடைந்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்தும் காஸாவில் நிலைக்கொண்டிருப்பதாக ஒல்மேர்ட் தெரிவித்துள்ள அதேவேளை, காஸாவில் ஒரு இஸ்ரேலியப் படைவீரர் இருப்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதென ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் காஸா மீதான தடைகளை தளர்த்தி இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் பெறும்வரை இஸ்ரேல் மீது தாம் தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச நேரப்படி (ஜி. எம்.ரி.)நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை தொடர்ந்து 22 நாட்களுக்குப் பின்னர் காஸாவில் அமைதி நிலவுவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத் தாக்குதல்களில் இதுவரை 1200இற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் 5300 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 410 சிறுவர்களும் உள்ளடங்குவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இஸ்ரேலிய தரப்பில் 10 படையினர் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஒல்மேர்ட்; ஹமாஸ் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இத் தாக்குதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முற்று முழுதாக அடைவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளமையை எமது எதிர்ப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அர்த்தப்படுத்த முடியாதென ஹமாஸின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒல்மேர்ட்டின் போர்நிறுத்த அறிவிப்பு வெளிவந்த பின்னரும் பல ரொக்கெட் தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நேரத்திலிருந்து எவ்வித ரொக்கெட்டுக்களும் ஏவப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து ரொக்கெட்டுகளை ஏவினால் பதில் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு இஸ்ரேலியத் துருப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலின் போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் காஸாவிலுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஆகியோர் நாளை பதவி விலகவிருக்கும் நிலையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் பராக் ஒபாமாவுடன் சுமுகமான உறவை பேணுவதற்காகவே பதவியேற்பு வைபவத்திற்கு முன்னர் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நீண்ட கால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராயும் முகமாக எகிப்திய ஜனாதிபதி வெறாஸ்னி முபாரக் உலக நாடுகளின் தலைவர்களின் சந்திப் பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேய்க்கில் நேற்று பிற்பகலில் ஆரம்பமாகவிருந்த இம் மாநாட்டில் முபாரக் , பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் , பிரான்ஸ், பிரிட்டன் , ஜேர்மனி, துருக்கி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.