புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது – ஜே.வி.பி. தெரிவிப்பு

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித்த ஹேரத் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலை முழுமையாக முன்னெடுக்கும் அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவே சிவ்சங்கர் மேனன் இங்கு வந்தார். இதுவே உண்மையாகும்.

எனவே அரசாங்கம் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு எவ்வாறான அரசியல் தீர்வை காண வேண்டுமென நாமே தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து இந்தியாவுக்கு தீர்வை முன்வைக்கும் அதிகாரம் கிடையாது.

அதேவேளை இந்தியாவின் யோசனைகளை ஏற்று அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு கிடையாது. அதிகாரப் பரவலாக்களுக்காக மக்கள் ஆணை வழங்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு சம உரிமைகளை வழங்கவே ஆணை வழங்கினர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்குமென உறுதியளிக்கும் அதே நேரத்தில் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழர் கூட்டமைப்பினரை டெல்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.

இது இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது. புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது.

இலங்கையில் பிரச்சினை தொடர்வதன் மூலமே இந்தியாவின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். எமது பிரச்சினையை பயன்படுத்தி இங்கு இந்திய வர்த்தகத்தை வியாபிக்கச் செய்து எமது பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்றார்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.