அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும்.-ஆயர்கள் கூட்டம்

வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம் எனராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டதில் சில

வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம். வன்னி நிலப்பரப்பானது தற்போது குடிசன அடர்த்தி மிகுந்த, அளவிலான குறுகிய பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்ட சில சம்பவங்களைப் பற்றி எம்மில் ஒருவர் (யாழ்.ஆயர்) அண்மையில் தங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.

எனவே பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதானால் அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும். குறைந்தபட்சம் சிறுவயதினருக்கும் அவர்களுக்குத் துணையாக வரும் முதியோருக்கு இவை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

“இராணுவத்தீர்வின் வெற்றி அரசியல் தீர்வின் அவசியத்தை மறைத்துவிடும்.” என்ற பேரச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. இந்த அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். இதன் பயனாக இராணுவ நடவடிக்கையில் இருந்து சிவில் நிர்வாகத்திற்கும் அதன்பின் பங்கேற்கும் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், சட்ட ஒழுங்கிற்கும் இட்டுச்செல்லும் இடை மாற்றம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குடாநாட்டிலும் கிழக்கிலும் காணப்படுகின்ற ராணுவ, சிவில் இரட்டை நிர்வாகம் போன்ற நிலைமைகள் தொடர்ந்து இருக்கும்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.