காங்கிரசை வேரோடு அழிப்பதே லட்சியம்: திருமாவளவன் சபதம்

செங்கல்பட்டு : “காங்கிரஸ் கட்சியுடன் இனி ஒட்டும் உறவும் கிடையாது. அக்கட்சியை புல், பூண்டு இன்றி வேரோடு அழிப்பதே என் லட்சியம்’ என்று, உண்ணாவிரதத்தை முடிக்கும் முன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசினார்.அவர் மேலும் பேசியதாவது:நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டு தமிழின துரோக கட்சிகள், நன்றிகெட்ட கட்சிகள், மனிதநேயமற்ற கட்சிகள் தவிர குறிப்பாக காங்கிரஸ், அ.தி.மு.க., கட்சிகள் தவிர்த்து பல்வேறு கட்சித் தலைவர்கள், தங்கள் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

என்னுடைய ஒரே கோரிக்கை ஈழத்தமிழகம் மலர வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது தான். நான் மறைமலை நகரில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கிய பிறகுதான் போலீசாருக்கே தகவல் தெரியும். போலீசார் எனக்கு ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி தருவதாகக் கூறினர். சாகும்வரை போராட்டத்திற்கு அனுமதி தரமுடியாது என தெரிவித்து விட்டனர். நான் ஈழத்தமிழர் பகுதிக்கு இரண்டு முறை சென்று வந்துள்ளேன். 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஐந்து லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இப்போது, முல்லைத் தீவில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் உண்ணாவிரதத்தை துவங்கினேன்.

நான் உண்ணாவிரதம் நடத்துவதை, கருணாநிதியும், திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் நாடகம் என ஜெயலலிதா கிண்டல் செய்கிறார். நாடகம் நடத்தும் தேவை எனக்கு இல்லை. மாயாஜால வித்தைகளைக் காட்டி ஏமாற்றி பிழைப் பதற்காக பொது வாழ்வுக்கு வரவில்லை.ஈழத்தமிழர் பிரச்னையில் ஒருமித்த கருத்துக்களைக் கொண்ட அ.தி.மு.க.,விலுள்ள வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் வெளியேற வேண்டும். சிவ சங்கர மேனன் கொழும்புக்கு சென்றது ஏமாற்றத்தை தருகிறது. ஈழத்தமிழர்களை காப்பாற்ற படகு பயணம் செல்ல நான் தயார்.

காங்கிரசுடன் எங்கள் கட்சிக்கு இனிமேல் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை; தொடர்பும் இல்லை. ஆறரை கோடி தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து விட்டது. காங்கிரஸ் கட்சியை புல் பூண்டு இல்லாமல் வேரோடு சாய்ப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் லட்சியம். அண்ணல் அம்பேத்கரின் மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு காங்கிரசை ஒழிப்பேன்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பேன். தமிழக முதல்வருக்கு எதிரான போராட்டம் அல்ல; தமிழக அரசுக்கு எதிரான போராட்டமும் அல்ல.

நான் வெளியிடத்தில் போராட்டம் நடத்தினால் என் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; கட்சிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். பல்வேறு இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.ஒரு சில ஊடகங்கள் இரட்டிப்பு செய்தும், எதிர்மறையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. என் கட்சியினர் நலன் கருதி என் போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.