ஆயிரம் திருமாவளவன் வந்தாலும்முடியாது: காங்.,

சென்னை: இலங்கைப் பிரச்னையை அரசியலாக்கும் திருமாவளவனால் காங்கிரசை பலவீனப்படுத்த முடியாது,” என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், “”பிரபாகரனை ஆதரித்துப் பேசும் தமிழ்த் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும்” என, அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜெயக்குமாரும் தெரிவித்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழும் நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன் ஓர் அங்கமாக வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை, இலங்கை அதிபரிடமும், அமைச்சர்களிடமும் பேசி தெளிவாக்கியுள்ளார். விரைவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை அதிபரைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவார்.”இலங்கைத் தமிழர் பிரச்னையால் காங்கிரஸ் பலவீனம் அடையும்’ என, திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு திருமாவளவன் அல்ல ஓராயிரம் திருமாவளவன் வந்தாலும் காங்கிரசை பலவீனப்படுத்த முடியாது. காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் மேலும் பலம் அடையும்.

தமிழகத்தில் இலங்கைப் பிரச்னையை வைத்து அரசியல் நடத்த முடியாது. மக்கள் அதை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், தனிப்பட்ட முறையில் எந்தத் தலைவரும் எடுக்கும் முயற்சிகளால் மாற்றம் வரப்போவதில்லை. தமிழினத்தைக் காப்பாற்ற வெற்றுக் கூச்சல் போட்டால் காரியம் நடக்காது.இவ்வாறு தங்கபாலு கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில், மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை தங்கபாலு வழங்கினார். ஓவியர் நலவாரிய உறுப்பினர் தியாகு தலைமை வகித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், “”அமிர்தலிங்கம், பத்மநாபா, பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்களை பிரபாகரன் சுட்டுக் கொன்றபோது தமிழ்த் தலைவர்கள் எங்கே போனார்கள்? ஏன் குரல் கொடுக்கவில்லை? விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் எந்த இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் அமைதி குலைந்து போகும். பயங்கரவாதி பிரபாகரனை ஆதரித்துப் பேசும் தமிழ்த் தலைவர்களை அரசு, பாரபட்சம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும்,” என்றார்.வாழப்பாடி ராம.சுகந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.