பஸ்களை எரிக்கும் வன்முறை கும்பலை சுட்டுத் தள்ளு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் நேற்று, நான்கு அரசு பஸ்கள் எரிக்கப்பட்டன. பஸ் எரிப்பு சம்பவங்கள் தொடர்வதால், வன்முறையில் ஈடுபடும் கும்பலை சுட்டுத் தள்ள டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், 15ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் துவங்கினார். இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தை அமைப்பினர், தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு பஸ்களை கல் வீசி தாக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும் சேதப்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ்கள் இரண்டை, விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வழி மறித்து எரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புகுந்த மர்மக் கும்பல், அங்கு நிறுத்தி வைத்திருந்த இரண்டு டவுன் பஸ்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துச் சென்றனர். இதில், ஒரு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது; மற்றொரு பஸ் பாதி எரிந்து சேதமடைந்தது. மரக்காணம்: நேற்று காலை புதுச்சேரியிலிருந்து ஆலத்தூர் வழியாக விழுப்புரம் கோட்ட அரசு பஸ்(பதிவெண்.டி.என்.32-என்-2651) தடம் எண் 83.ஏ சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. குரும்புரம் அருகே பஸ் சென்ற போது வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 25 பேர் கொண்ட கும்பல், பஸ்சை வழி மறித்தனர். பின், அந்த கும்பல், கண்டக்டரிடம் இருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை பஸ் முழுவதும் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது. மரக்காணம் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது. டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அமல்ராஜ் சம்பவ இடங்களைப் பார்வையிட்டு, பஸ்களை எரித்த கும்பலைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பஸ் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.

டி.ஐ.ஜி., மாசானமுத்து கூறுகையில், “கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பஸ்கள் மீது கல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. இதை தடுக்க, போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஆறு பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. பஸ் எரிப்பு தொடர்பாக நான்கு பேரும், கல் வீச்சு சம்பவம் தொடர்பாக 10 பேரும், கடலூர் மாவட்டத்தில் 50 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகிறோம். “பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், பஸ் எரிப்பு மற்றும் கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை, தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்’ என்றார். டி.ஐ.ஜி.,யின் உத்தரவைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசி பஸ் எரிப்பு: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலிருந்து நேற்று மதியம் சேந்தநாடு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் (பதிவெண் டி.என்.32-என்-1719) சென்றது. அங்கிருந்து பகல் 12.15 மணிக்கு உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டது. மட்டிகை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த 20 பேர் பஸ்சை வழி மறித்து, தடி மற்றும் கற்களால் கண்ணாடியை உடைத்தனர். பின், பஸ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில், பஸ்சின் முன்பக்க இடதுபுற டயர் மற்றும் பயணிகள் இருக்கை ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் வந்த பயணிகளும், அருகில் வயல்வெளியில் வேலை செய்தவர்களும், வயல்வெளியில் தேங்கியிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது தவிர, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திண்டுக்கல் நிலக்கோட்டை அருகேயுள்ள வெள்ளத்தாதன்பட்டி பிரிவு மற்றும் கோவை ஆத்துப்பாலம் உட்பட பல இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், பல பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

போலீஸ் பாதுகாப்புடன் இயங்கிய பஸ்கள்: தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை, ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நேற்று காலை புதுச்சேரி – திண்டிவனம் மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள், துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 7 மணிக்கு மேல் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் அரசு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடலூரிலிருந்து சிதம்பரம் மார்க்கமாகச் செல்லும் பஸ்கள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் டி.ஜி.பி., ஜெயின் கடும் எச்சரிக்கை: “பொதுமக்களுக்கு பயன்படும் போக்குவரத்து சாதனங்கள் உள்ளிட்ட அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவோர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்’ என, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி., ஜெயின் எச்சரித்துள்ளார். இது குறித்து டி.ஜி.பி., ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்தி உண்ணாவிரதம், பேரணிகள், மனிதச் சங்கிலிகள் போன்ற அறப்போராட்டங்களை நிகழ்த்தி, அத்துடன் டில்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளன. இச்சூழ்நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த போது, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயலில் ஈடுபடுகின்றனர். சில கும்பல்களும் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டுவது போல், பொதுமக்களுக்குப் பயன்படும் அரசு போக்குவரத்து சாதனங்களைக் கொளுத்தியும், உடைத்தும் அராஜக வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 பஸ்கள் தீ வைப்புக்கும், உடைப்புக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. பொது அமைதிக்கும், பொதுமக்களுடைய உயிர் பாதுகாப்புக்கும், உடைமைகளுக்கும் ஏற்படுகிற இழப்பை மேலும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதால், அவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சட்ட விரோதமானச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு டி.ஜி.பி., கடுமையாக எச்சரித்துள்ளார்.

81 மணி நேர உண்ணாவிரதம் முடிவு: சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு, 81.30 மணி நேரம் நேற்று முடிவடைந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பழரசம் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கடந்த 15ம் தேதி காலை 9.20 மணிக்கு மறைமலை நகரில், போலீசாரின் முன் அனுமதியின்றி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த உண்ணாவிரதத்தால், தமிழகத்தில் பல இடங்களில் அரசு பஸ்கள் எரிக்கப்பட்டு, சேதம் ஏற்பட்டது. தி.மு.க.,-பா.ம.க., உட்பட கட்சித் தலைவர்கள் மற்றும் இப்பிரச்னையில் ஆதரவு தரும் தலைவர்கள் பலர் நேரில் வந்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டனர். தனது கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களின் கூட்டத்தைக் கூட்டி நேற்று ஆலோசித்தார். நேற்று மாலை 6.50 மணிக்கு ராமதாஸ் பழரசம் கொடுத்து, திருமாவளவனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அதன் மூலம் 81.30 மணி நேரம் திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்துக் கொண்டார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.