லிங்கனைப் போல ஒபாமா ரயில் பயணம் : அமெரிக்காவை வளமாக்க உறுதி

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் போல, பராக் ஒபாமாவும் பிலடெல்பியாவிலிருந்து வாஷிங்டனுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். “நாடு பெரிய சவால்களை சந்தித்து வரும் இந்த நேரத்தில், அமெரிக்கர்கள் புதிய சுதந்திர பிரகடனத்தை அறிவிக்க உறுதி மொழி ஏற்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் போன்று, இவரும் பதவியேற்கத் தீர்மானித்துள்ளார். அதன் முதல் கட்டமாக, 1861ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன், பிலடெல்பியாவிலிருந்து வாஷிங்டனுக்கு ரயிலில் சென்று பதவியேற்றது போல, ஒபாமாவும் நேற்று பிலடெல்பியாவிலிருந்து ரயிலில் புறப்பட்டுச் சென்றார். இந்த 220 கி.மீ., தூர பயணத்தின் போது, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான மக்கள் வழி நெடுகிலும் கூடி, அவரை வாழ்த்தினர். பலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ஒபாமா பயணித்த ரயில் சென்ற வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதிகளில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பயணத்திற்கு முன்னதாக ஒபாமா பேசுகையில், “நாடு பெரிய அளவிலான சவால்களை சந்தித்து வருகிறது. இந்தத் தருணத்தில் மத வெறி மற்றும் தீய எண்ணங்கள் இல்லாத புதிய சுதந்திர பிரகடனத்தை அறிவிப்பது என, அமெரிக்கர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும்’ என்றார். வில்மிங்டனில் ரயில் நின்ற போது, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனும், அவரின் குடும்பத்தினரும் ரயிலில் ஏறி, ஒபாமா குடும்பத்தினருடன் சேர்ந்து பயணித்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.