தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை: ராஜபக்சே

கொழும்பு : தமிழர்களின் உயிர்,உரிமைகளைப் பாதுகாக்க தனது அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று, இந்தியாவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், அதிபர் ராஜபக்சேவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். கண்டி நகரில் நடந்த இந்த சந்திப்பு, சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

இந்த சந்திப்புக்குப் பின் இலங்கை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நடத்திய பேச்சு வார்த்தையில் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார விவகாரம், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.

இலங்கையின் வடக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரிடம் ராஜபக்சே விவரித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு தயாரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த்தும் இலங்கை அதிபர் விளக்கினார்.

தமிழர்களின் உயிர், உரிமைகள், உடமைகளை பாதுகாக்க தனது அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று, இந்தியாவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்தார்.

அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும், இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் என்றும் அதிபர் ராஜபக்சேவிடம் சிவசங்கர் மேனன் உறுதியளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.