இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு: இந்தியா வலியுறுத்தல் (19.01.2009) செய்திகள்.

ஈழத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், நேற்று தலைநகர் கொழும்பில் அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில், விடுதலை புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது. மேலும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா உதவி அளிப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், சிவசங்கர் மேனன் இந்தியா திரும்பிய நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘ஒன்றுபட்ட இலங்கையின் ஒற்றுமை எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு, அதே நேரம் தமிழர்கள் உட்பட அனைவரும் அமைதியாகவும், கவுரவமாகவும் வாழ வேண்டும் என்பதை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.

இலங்கையில் நீடித்து வரும் இனப் பிரச்னைக்கு உடனடியாக அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை எட்ட வேண்டும். அதற்கான பேச்சு வார்த்தைகள் தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மருந்து, கூடாரங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கையான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது குறித்தோ,அல்லது தமிழர்கள் பகுதியில் தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்றோ இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.