டிசிஎஸ் புதிய தலைவராக சந்திரசேகரன் நியமனம்

மும்பை: டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிர்வாக இக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த ராமதுரைக்குப் பதில் அப்பதவியில் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் பவர்புல் தலைவராக 1996-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்தவர் ராமதுரை. இந்த ஆண்டு அவருக்கு 65 வயது ஆகிறது. நிறுவனத்தின் சட்ட திட்டங்களின் படி 65 வயதுக்குப் பிறகு நிர்வாகத்தின் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்க முடியாது.

எனவே அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறார். ஆனாலும் ராமதுரையின் அனுபவம் மற்றும் திறமையை இழக்க விரும்பாத டிசிஎஸ், அவருக்கென்றே ஒரு புதிய பதவியை உருவாக்கியுள்ளது.

இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு டிசிஎஸ் துணைத் தலைவர் (non-executive) ஆகவும், ஆலோசகராகவும் ராமதுரை செயல்படுவார்.

புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் இயக்குநராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே டிசிஎஸ்ஸின் சிஓஓவாக இருந்தவர்.

டிசிஎஸ் தவிர, டாடாவின் வேறு இரு பெரிய நிறுவனங்களுக்கும் புதிய சிஇஓக்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது. டாடா மோட்டார்ஸ் ரவிகாந்த், டாடா கெமிகல்ஸ் முகுந்தன் இருவருமே விரைவில் ஓய்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.