75 நாளில் 40,000 படங்கள் அனுப்பி சந்த்ராயன் சாதனை

மும்பை: சந்த்ராயன்-1 விண்கலம் தனது ஏவப்பட்ட முதல் 75 நாட்களில் 40,000படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டை சேர்ந்த செயற்கோளும் இவ்வளவு படங்கள் அனுப்பியதில்லை என்பதால் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன்-1 விண்கலம், நவம்பர் 8ம் தேதி நிலவின் 100 கி.மீ. சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

நவம்பர் 14ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து எம்ஐபி (Moon Impact Probe) துணைக் கலம் வீடியோ, ரேடார், ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவற்றுடன் நிலவில் தரையிறங்கியது.

தற்போது இது டெரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) மூலம் படங்களை எடுத்து பெங்களுரூக்கு அருகில் உள்ள பயாலலுவில் இருக்கும் இந்திய ஆழ் விண்வெளி மையத்துக்கு அனுப்பி வருகிறது. பின்னர் அங்கிருந்து இஸ்ரோவுக்கு அனுப்படுகிறது.

சந்த்ராயன்-1 சராசரியாக ஒரு நாளுக்கு 535 படங்கள் என, முதல் 75 நாட்களில் 40 ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டை சேர்ந்த செயற்கோளும் இவ்வளவு படங்கள் அனுப்பியதில்லை என்பதால் இது புதிய சாதனையாக இருக்கும் என இஸ்ரோ நம்புகிறது.

எம்ஐபி எடுத்த படங்களில் சில 5 மீட்டர் அளவுக்கு துல்லியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்த்ராயன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ 2012ல் சந்த்ராயன் 2 விண்கலனையும், 2020ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தயாரித்து வருகிறது. இது குறித்து சந்த்ராயன் திட்டக் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், 2015ல் பூமிக்கு மேல் 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இந்தியர் ஒருவரை கொண்ட விண்கலம் செலுத்தப்படும். நிலவுக்கு இந்தியர் ஒருவரை அனுப்புவதிலும் இஸ்ரோ ஆர்வமாக இருக்கிறது. அடுத்த கட்டம் இது தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.