ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுனர் பரிந்துரை?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் நீடித்து வரும் குழப்பம் காரணமாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுனர் சையத் ரஸி பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு எடுக்கவிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான சிபு சோரன் கடந்த 9ம் தேதி நடந்த தாமர் தொகுதி இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்தார். இதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது கட்சி எம்.எல்.ஏவான சம்பை சோரனை அடுத்த முதல்வராக அறிவித்தார்.

ஆனால் இம்முடிவை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அரசு அமைப்பதில் நிலவும் நிலையற்ற தன்மையை தெளிவாக விளக்கி சட்டசபையை கலைத்துவிட்டு ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துமாறு ஆளுனர் சையத் ரஸி பரிந்துரை செய்துள்ளார்.

இக்கடிதத்தை ஜனாதிபதி, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஜனாதிபதி ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டும் என தெரிகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.