டி.ஆர்.எஸ்சுடன் இணையும் விஜயசாந்தி கட்சி

ஹைதராபாத்: தனது தல்லி தெலுங்கான கட்சியை, சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து விட்டார் நடிகை விஜயசாந்தி. ராவுடன் இணைந்து தெலுங்கானாவுக்காக போராடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தனி தெலுங்கானா மாநிலம் கோரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமிதி நீண்ட காலமாக போராடி வருகிறது.

அதே கோரிக்கைக்காக தல்லி தெலுங்கானா (தாய் தெலுங்கானா) என்ற கட்சியை தொடங்கி போராடி வந்தார் விஜயசாந்தி. ஆனால் அவரது கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு செல்வாக்கோ, புகழோ கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை அடைவதற்காக சந்திரசேகர ராவுடன் இணைந்து, செயல்பட தயார். இதற்காக எனது கட்சியையும், டி.ஆர்.எஸ்ஸுடன் இணைக்கத் தயார் என அறிவித்தார் விஜயசாந்தி.

இந்தப் பின்னணியில் தற்போது தனது கட்சியை, ராவின் கட்சியுடன் இணைந்து விட்டார் விஜயசாந்தி. அவரும் டி.ஆர்.எஸ்ஸில் இணைந்துள்ளார்.

நேற்று மதியம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த இணைப்பு விழா நடந்தது. இணைப்புக்குப் பின்னர் சந்திரசேகர ராவை, தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் விஜயசாந்தி.

அதை ஏற்று ராவ், விஜயசாந்தி வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். பின்னர் விஜயசாந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைய வேண்டும் என்ற லட்சியத்தில் தான் கட்சி தொடங்கினேன். அந்த லட்சியம் நிறைவேற வேண்டுமானால் தெலுங்கானா வை ஆதரிக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

இதற்கு முன் மாதிரியாக எனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்து விட்டேன்.

என்னைப் போல தெலுங்கானாவை ஆதரிக்கும் நவ தெலுங்கானா கட்சியும் சந்திரசேகரராவுடன் இணைய வேண்டும். இதற்காக நான் அந்த கட்சியின் தலைவரான தேவேந்தர் கவுடை சந்தித்து பேசுவேன் (இவர் தெலுங்கு தேசத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சியை நடத்தி வருகிறார்).

வருகிற தேர்தலில் நான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கா மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றார் விஜயசாந்தி.

சந்திரசேகரராவ் கூறும் போது, எங்கள் கட்சியில் விஜயசாந்தி இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தெலுங்கானா கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படும். மேலும் அவர் கட்சிப்பணி ஆற்ற எங்கள் கட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும் என்றார்.

சமீபத்தில்தான் தெலுங்கு தேசம் கட்சியுடன் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கூட்டணி அமைத்தது. இந்தக் கட்சிகள் இடதுசாரிகள் அமைத்து வரும் மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

இப்படி வலுவான சக்திகள் ஒன்று சேர்ந்து வருவதால், தெலுங்கானா பகுதியில் காங்கிரஸுக்கும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கும் நெருக்கடி ஏற்படும் என கணிக்கப்படுகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.