யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது : பிரித்தானிய பிரதமரின் கோரிக்கை நிராகரிப்பு

விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ளாதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்தத்தில் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் யுத்தநிறுத்தமொன்றை கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கும்போதே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றின்போது அந்த நாட்டு பிரதமர் கோர்டன் பிரௌன் வெளியிட்டிருந்த கருத்துத் தொடர்பான அரசாங்கத்தில் நிலைப்பாடு குறித்து கொழும்பு ஊடகமொன்று விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுக்களின் நிலை தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றின்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்திருந்த பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரௌன், இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு அழுத்தம்கொடுக்குமுகமாக பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த புதன்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதியைச் சந்தித்திருக்கும் பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிரௌன், மத்திய கிழக்கு பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகவே கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.