களநிலைவரம் பற்றி இராணுவத் தளபதி இராணுவத்தினருக்கு விளக்கம்

அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், அவர்களுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அவற்றைத் தடுப்பதற்கு இயன்றளவு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணம் இராணுவத்தினரிடம் வீழ்ந்த பின்னர் தென்பகுதியில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்ததைப் போன்ற திட்டங்களை விடுதலைப் புலிகள் கையாழக்கூடிய சூழ்நிலையிருப்பதல் அது பற்றியும் கவனமாக இருக்கும்படி இராணுவத் தளபதி, களநிலைத் தளபதிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்குச் சென்ற இராணுவத் தளபதிக்கு, களநிலைத் தளபதிகள் தமது பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்துள்ளனர்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.