பொட்டு அம்மானின் “வன்னி ரெக்’ கிற்கு அமெரிக்காவிலிருந்து உயர் தொழில்நுட்ப உபகரணங்கள்

அரச படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னரே புலிகள் இயக்கத் தலைமைத்துவம் அவர்களின் அங்குள்ள முகாம்கள் உட்பட முக்கிய நிலையங்களையெல்லாம் முல்லைத்தீவை நோக்கி நகர்த்திவிட்டனர். இவ்வாறு புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உட்பட முன்னணித் தலைவர்கள் தங்கியிருக்கும் இரகசிய நிலையங்கள் மற்றும் ஆயுத சேமிப்பு நிலையங்கள் புலிகள் இயக்க பொலிஸ் தலைமை நிலையம், அரசியல் பிரிவு, தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள், காயப்பட்டோர் பராமரிப்பு மற்றும் உயர் மட்டத் தலைவர்களுக்கான இரகசிய சிகிச்சை நிலையங்கள் போன்ற அனைத்துமே முன்கூட்டியே கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து மாயமாய் மறைந்துவிட்டன.

இவ்வாறு புலிகள் தலைவர்களால் இரகசியமாக இடமாற்றப்பட்டிருக்கும் நிலையங்களில் தகவல் தொடர்பு மற்றும் இணையத் தொடர்புகளுக்கான நிலையம் இப்பொழுதும் முல்லைத்தீவுப் பிரதேசத்தின் குறிப்பிட்டதொரு பகுதியில் தொடர்ந்தும் இயங்கி வருவதையே சர்வதேச இணையத் தகவல்களைத் தொடர்ச்சியாக இடையூறில்லாமல் புலிகள் இயக்க இணையத்தளங்கள் தெரிவித்து வருவது காட்டுகிறது. அண்மையில் வெளியாகியிருந்த புலனாய்வுத் தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அல்லது சிவசங்கர் நடத்தி வந்த வன்னி ரெக் எனப்படும் கணினித் தொடர்பு மற்றும் இணையத்தள நிலையம் தற்போது விசுவமடு பிரதேசத்தின் குறிப்பிட்டதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னர் கிளிநொச்சியை நோக்கி அரச படையினர் விமானத் தாக்குதல்களையும் தரைப்படை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திய சந்தர்ப்பத்திலேயே கிளிநொச்சியை அண்டியுள்ள இரகசிய நிலக்கீழ் நிலையம் ஒன்றில் இயங்கி வந்ததாக கூறப்பட்ட பொட்டு அம்மானின் வன்னி ரெக் கணினி மற்றும் இணையத்தள நிலையத்திலிருந்து கணினிகள் உட்பட அனைத்து தகவல் தொடர்பு உபகரணங்கள், கருவிகளும் குறிப்பிட்ட ஒரு வார காலத்தில் இரவோடு இரவாக குறித்த விசுவமடுவிலுள்ள இரகசிய நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணினி மற்றும் இணையத்தகவல் பிரிவுக்கு பொட்டு அம்மான் ரொஸி உளவுப் பிரிவே பொறுப்பாக உள்ளது.

மேலும் அண்மையில் வெளியாகியுள்ள புலனாய்வுத் தகவல்களிலிருந்து பொட்டு அம்மானின் ரொஸி குழுவினர் நடத்தி வரும் இந்த வன்னி ரெக் நிலையம் ஒரு சர்வதேச தகவல் தொடர்பு நிலையமாக இயங்கி வருவதாகவும் இந்த நிலையத்திற்கு வேண்டிய அனைத்து தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், கருவிகளையும் ஐக்கிய அமெரிக்காவில் பிரதானமாக நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் வசிக்கும் புலிகள் இயக்கத்தினரும் ஆதரவுப் பிரமுகர்களுமே வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் முக்கியமான சில தகவல் தொடர்பு மற்றும் இணையத் தொடர்பு நிறுவனங்களுடனும் தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் பொட்டு அம்மானின் ரொஸி தகவல் பிரிவினர் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, ஜப்பானில் ரோக்கியோவில் இயங்கும் தகவல் தொடர்பு மற்றும் இணையத்தள நிலையம் ஒன்றுடனும் பொட்டு அம்மானின் மேற்படி வன்னி ரெக் நிலையம் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளது. குறித்த ரோக்கியோ உயர் தொழில்நுட்பத் தகவல் நிலையத்தைத் தமிழ்ப் பெண் ஒருவரே நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி ஸ்ரீலங்காவுக்குப் பயணம் செய்து கொழும்பில்தங்கியிருந்துள்ளார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கா வந்தபோது கொழும்பு திம்பிலிகசாய பகுதியில் நீண்ட காலம் தங்கியிருந்துள்ளார். இந்தக் காலப் பகுதியில் இந்தத் தமிழ்ப் பெண் திம்பிலிகசாயவில் செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருந்துள்ளார். ஆயினும் அவரைப் பற்றி தகவல்களை பாதுகாப்புப் புலனாய்வு பிரிவினர் பெற்றுக் கொண்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தவுடனேயே குறித்த பெண் கொழும்பிலிருந்து தலைமறைவாகி விட்டார். இவரைப்பற்றிய விசாரணைகளை புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் உயர்மட்டத் தகவல் தொழில்நுட்பச் செயற்பாடுகளுக்கும் சர்வதேசத் தகவல் தொடர்புகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இயங்கும் மேற்படி நிறுவனங்கள் உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு இணையத் தொடர்பு, சேவைகளையும் வழங்கி வருவது பற்றி பாதுகாப்புத்துறை புலனாய்வுப் பிரிவு அந்த நாடுகளிலுள்ள புலனாய்வுத் துறைகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் விரைவில் சந்தேகத்துக்குரிய குறிப்பிட்ட உயர் தொழில்நுட்ப நிலையங்கள் மீது அந்த நாடுகளிலுள்ள இரகசியப் புலனாய்வுத் துறையினர் பயங்கரவாதத் தொடர்பு சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.