காஸாவுக்கு சென்ற நிவாரணக் கப்பலை திருப்பி அனுப்பியது இஸ்ரேல் கடற்படை

மேற்குக்கரை: காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கான நிவாரண உதவிகளுடன் வந்த கிரேக்க கப்பல் ஒன்றை இஸ்ரேலிய போர்க்கப்பல் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிவாரணக் கப்பல் தற்பொழுது சைப்பிரஸை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் திரும்பிச்செல்லாவிடில் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் போர்க்கப்பல் எச்சரித்திருந்ததாகவும் கிரேக்க கப்பலிலுள்ள உதவிப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சுதந்திர காஸா முன்னணியே இக்கப்பலை காஸாவிற்கு அனுப்பியுள்ளது.

இவ் அமைப்பைச் சேர்ந்த 21 பேர் இக்கப்பலில் பயணித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இக்கப்பலில் பயணம் செய்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்;

இக்கப்பல் காஸாவிலிருந்து 100 மைல் தொலைவில் இருந்தபோது எம்மைச் சுற்றிவளைத்த நான்கு இஸ்ரேலியப் போர்க் கப்பல்கள் திரும்பிச் செல்லாவிடின் எம்மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தின.

எவ்வாறாயினும் எம்மை காஸாவிற்கு செல்லாமல் தடுப்பதில் அவர்கள் தீவிரமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானின் நிவாரணக் கப்பலும் இஸ்ரேலால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சைப்பிரஸிலிருந்து புறப்பட்டுவந்த இக்கப்பலில் மருத்துவர்கள், மனிதநேயப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இஸ்ரேலின் யுத்த டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் காஸாவை நோக்கி தொடர் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளன.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மோதலில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சர்வதேசம் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கிட்டதட்ட 5 இலட்சம் மக்கள் வசிக்கும் நகரொன்றினுள் இஸ்ரேல் இராணுவம் முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காஸாவில் நிலைக்கக்கூடிய உறுதியானதொரு யுத்த நிறுத்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.