பிலிப்பைன்சில் கடும்மழை, மண்சரிவு 9 பேர் பலி; 2 இலட்சம் பேர் இடம்பெயர்வு

மணிலா: பிலிப்பைன்சில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் 9 பேர் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளதுடன் 2 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் பலர் காணாமல்போயுள்ளதாகவும் பிலிப்பைன்சின் தேசிய அநர்த்த முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சின் கிழக்குப் பகுதி சமுத்திரத்தில் இருந்த பனிப்பொழிவின் முடிவே வடக்கு லுசன் மாகாணம் முதல் தெற்கின் மின்டானோ தீவு வரையான 11 மாகாணங்களுக்கும் கடும் மழை ஏற்படுவதற்கு உந்தும் காரணமாக இருந்துள்ளது.

இக்கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 37 ஆயிரத்து 889 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 91 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தென்பகுயிலுள்ள மிசாமிஸ் ஒக்ஸிடென்ரல் மற்றும் மிசாமிஸ் ஒறியென்ரல் மாகாணங்களின் சில பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தொடரும் மழையினால் உள்ளூர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள அதேவேளை, அகுசன்டெல் நோர்ட் மாகாணத்திலுள்ள ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.

இதேவேளை, பல கரையோரப் பிரதேங்களை புயல் தாக்கக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பிராந்தியத்திலுள்ள பிகொல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் சிறிய மோட்டார் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

கடும் மழை மற்றும் மண்சரிவு தொடர்ந்து இடம்பெறுவதால் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதும் சிரமத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.