டார்பூரின் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்டது சூடானிய அரசு

டார்பூர்: சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகளவான குண்டுத் தாக்குதல்களை நடத்தியமையை சூடானிய இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்க தவறியமையால் போராளிகளை இலக்குவைத்து இத் தாக்குதல்களை மேற்கொண்டதாக இராணுவப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

டார்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலை சூடானிய இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளமை வழமைக்கு மாறானதொரு செயற்பாடாக அமைந்துள்ளதென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் சூடானிய ஜனாதிபதி ஓமர்அல்பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே புதிதாக இத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

அரசுக்கு ஆதரவான ஜன்காவீட் என்னும் போராளிக் குழுவொன்று டார்பூரிலுள்ள மக்களுக்கெதிராக கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சூடான் அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இதேவேளை, டார்பூரின் தென்பகுதியில் அரசின் விமானங்கள் தாக்குதல் நடத்தியமையை நீதிக்கும் சமத்துவத்திற்குமான போராளிக் குழுவொன்று (கெம்) உறுதிப்படுத்தியுள்ளது.

கெம் போராளிக் குழு தொடர் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்ததையடுத்தே இப்பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டதாக சிரேஷ்ட அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பஷீருக்கான பிடியாணையை இம்மாத இறுதிக்குள் சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்படுமானால் அது டார்பூர் முரண்பாடு மேலும் தீவிரமாவதற்கு வழிவகுக்குமென அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் டார்பூர் பிராந்தியத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் அடுத்த வெளியுறவு அமைச்சராக பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

சுமார் 6 வருடகாலமாக டார்பூரில் இடம்பெற்றுவரும் மோதல்களில் 3 இலட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் 27 இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் ஐ.நா. தெரிவிக்கின்றது.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.