இலங்கையில் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர்

பிரெஞ்சு ஜனாதிபதி, ஜேர்மன் அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்போவதாக அறிவிப்பு
இலங்கையில் யுத்தநிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இந்த விடயம் தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி, ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்சல் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டு வீச்சால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்த கிழக்கு லெய்செஸ்ரர் எம்.பி. கீத் வாஸ், ஒரு தலைப்பட்சமாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவோ மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையை நிறுத்துவதற்காக யுத்தநிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்க பிரதமர் தனது நல்லெண்ணத்தை பயன்படுத்துவாரா? என்றும் இதன் மூலம் அழகிய தீவில் சமாதானத்தை திரும்ப ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் குறித்து தான் அறிந்துள்ளதாகவும் கௌரவ உறுப்பினரின் (கீத்வாஸ்) உரிமையை தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதேசமயம், இலங்கையில் அவசரமாக யுத்தநிறுத்தம் தேவையென்ற கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தனது மனதிலுள்ள விடயங்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுண், அடுத்த ஓரிரு தினங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஜேர்மன் அதிபரும் விஜயம் செய்யும் போது இந்த விடயத்தை அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வாரெனவும் தெரிவித்துள்ளார்.

சமாதானத்திற்காகவும் தீர்வுக்காகவும் தன்னால் உதவியளிக்க முடியுமென பல சந்தர்ப்பங்களில் கிழக்கு லெய் செஸ்ரர் எம்.பி. கீத்வாஸ் கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதன் மூலமே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் கூறியிருந்ததுடன், தனது நிலைப்பாட்டை பல தடவைகள் கூறியிருந்தார்.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.