எந்த நேரத்திலும் போருக்கு தயார் நிலையில் நமது ராணுவம் உள்ளது – தளபதி தீபக் கபூர் அறிவிப்பு .

“எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தன் ராணுவத்தை குவித்து வருகிறது. இருந்தாலும், எந்த நேரத்திலும் போருக்கு தயார் நிலையில் நமது ராணுவம் உள்ளது. போர் என்பது கடைசி வாய்ப்பாகவே இருக்கும்” என, ராணுவ தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று, “இந்திய ராணுவத்துக்கு அச்சுறுத்தலும், சவால்களும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தளபதி தீபக் கபூர் பேசியதாவது:

முப்படையிலும் வீரர்கள், அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் என்று மத்திய அரசு கேட்கும் பட்சத்தில், அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது ராணுவத்தின் கடமை.

உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நாட்டின் நான்கு முக்கிய பகுதிகளில் என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவின் மையம் துவக்கப்பட உள்ளது. அதற்காக வீரர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். உடனடியாக ஏராளமான வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாத நிலை உள்ளது.

அதனால், ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் உள்ள வீரர்களை தற்காலிகமாக, என்.எஸ்.ஜி.,க்கு அனுப்பி வைக்க ராணுவம் தயாராக உள்ளது. என்.எஸ்.ஜி.,க்கு போதுமான வீரர்கள் தேர்வான பிறகு, பாராசூட் வீரர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

ராணுவத்தில் உள்ள சிறப்பு படைப்பிரிவினர், என்.எஸ்.ஜி., அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் எந்தவிதமான அச்சுறுத்தலையும், தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் இருக்க வேண்டும்.

உள்நாட்டில் உருவாகும் குழப்பங்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்தினர் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்கள், இதை வலியுறுத்துகின்றன.

எந்த விதமான பணியிலும் ஈடுபட, எந்நேரமும் ராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும். அண்டை நாடு, அணு ஆயுத நாடாக இருப்பதால், ராணுவத்தின் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகியுள்ளது.

சாதாரண போர், எந்த நேரமும் அணுஆயுதப் போராக மாறும் வாய்ப்பு உள்ளதால், எந்தவிதமான போரையுமும் சந்திக்கும் வகையில் ராணுவம் விளங்க வேண்டும். இவ்வாறு ராணுவ தளபதி தீபக் கபூர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் அதிகரித்துள்ளது. அதனால், இந்தியா எல்லாவிதமான வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறது.

மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் இருந்த அந்நாட்டு ராணுவம், இந்திய எல்லை நோக்கி திருப்பப்பட்டு, எல்லையில் படைகளை குவித்து வருகிறது. பாகிஸ்தானின் கிழக்கு எல்லை வழியாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய ராணுவம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. எந்த நேரத்தில் போரிடவும் தயாராகவே உள்ளது.

போர் பதட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனினும், அந்நாட்டுடன் தூதரக ரீதியாக, பொருளாதார ரீதியாக பேசிப் பார்ப்போம். முடியவில்லை என்றால், கடைசி வாய்ப்பாக, போருக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

அனைத்து விதமான வாய்ப்புகளும் திறந்தே இருக்கிறது. எனினும், அந்த முடிவு கடைசியில்தான் எடுக்கப்படும். எல்லா வாய்ப்புகளும் பயனற்றுவிட்டது என்று இந்திய தலைமை கருதும் பட்சத்தில், சர்வதேச கருத்து அனுமதிக்கும் நிலையில், போர் நடத்தப்படும்.

போர் மட்டுமே தீர்வு என்று இந்திய அரசியல் தலைவர்கள் கருதவில்லை. பயங்கரவாதிகள் கைகளில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் போய் சேராது என்று நம்புகிறேன். இவ்வாறு தீபக் கபூர் தெரிவித்தார்.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.