புலிகளால் காப்பாற்றப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவரும் சிறிலங்கா அரசின் தடையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவருக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

முரசுமோட்டை பகுதியில் 04.01.09 நடைபெற்ற மோதலின் போது காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளினால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

வெலிமட அம்பகாவத்தை பகுதியை சேர்ந்த லயன்ஸ் கோப்ரல் எச்.எம்.சமன் புஷ்பகுமார என்பவரே விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டவர் ஆவார்.

நெற்றியில் காயமடைந்த புஷ்பகுமாராவுக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனைத்துலக செஞ்சிலுவைச்கங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் மிகவும் மெதுவாக உரையாடுகின்ற போதும் அவரால் உதவிகள் இன்றி எதனையும் செய்ய முடியாது உள்ளதாக அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளுக்கு புறம்பாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான தடை காரணமாக தமிழ் மக்கள் மட்டுமல்லாது காயமடைந்து விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ள படையினரும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.