இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் நிவாரணப் பொருட்கள் -இந்தியா அனுப்ப முடிவு

கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. எஸ்.எஸ்.மேனன், இலங்கை அமைச்சர்கள் சந்திப்பின்போது இது முடிவானது.

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எஸ்.மேனன் கொழும்பு சென்றுள்ளார்.

நேற்று அவர் வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா, வெளியுறவு செயலாளர் பலித கொஹோனா, பாதுகாப்பு செயலாளர் கோதபாயா ராஜாபக்சே, அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு 2வது கட்டமாக ரூ. 2 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைக்கும் என மேனன் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழகத்திலிருந்து 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2வது கட்ட உதவிப் பொருட்களுக்கு அடையாளமாக ஒரு பேட்ஜ் மருந்துப் பொருட்களை பாசில் ராஜபக்சேவிடம் ஒப்படைத்தார் மேனன்.

இன்று அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவுள்ளார் மேனன்.

நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் மேனன் பேசுகையில், இந்திய, இலங்கை உறவு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு பாரம்பரியமானது. ஆழமானது. காலத்தையும் கடந்து இது நிலை பெற்றுள்ளது.

சர்வதேச அளவிலான தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இலங்கை, இந்தியாவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது என்றார் மேனன்.

ரோகித போகல்லகாமா கூறுகையில், நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்குரியது.

இலங்கை இனப் பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை ஒப்பந்தம்தான் தீர்வுக்கான சாத்தியமாகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கைப் படைகளுக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் 1987ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்தவும், அரசியல் சட்டத்தின் 13வது பிரிவு திருத்தத்தையும் அமல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

அதிபர் ராஜபக்சே கண்டி சென்றுள்ளார். அவரை அங்கு சென்று மேனன் சந்திக்கவுள்ளார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக அவர் பேசவுள்ளார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.