சமாஜ்வாடி சார்பில்தான் தேர்தலில் போட்டியிடுவேன் – சஞ்சய் தத்

மும்பை: சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராகவே நான் லக்னோ லோக்சபா தொகுதியில் போட்டியிடுவேன் என்று நடிகர் சஞ்சய் தத் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தான் விரும்பவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத், சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்னோ தொகுதியில் போட்டியிடுவார் என சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் அறிவித்தார்.

இதற்க சஞ்சய் தத்தின் தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளியிட்டார். சஞ்சய் தத் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரஸ் சார்பிலேயே போட்டியிடலாம் என்று கூறியிருந்தார் பிரியா.

இந்த நிலையில் தான் சமாஜ்வாடி வேட்பாளராகவே போட்டியிடப் போவதாக சஞ்சய் தத் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராகத்தான் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.

பிரியா தத் என்னைப் பற்றி தவறாகப் பேசவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். ஒரு வேளை அவர் தவறாகப் பேசியிருந்தாலும் கூட நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். மன்னித்து விடுவேன். அவர் எனது செல்லத் தங்கைதானே.

தடா சட்டத்தின் கீழ் நான் குற்றவாளியாக தண்டிக்கப்படவில்லை. எனவே நான் தடா குற்றவாளி அல்ல. ஆயுதச் சட்டத்தின் கீழ்தான் நான் தண்டிக்கப்பட்டேன். எனவே என்னைப் பற்றி செய்திகள் வெளியிடும்போது மீடியாக்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற சித்து போட்டியிடும்போது, நான் போட்டியிடக் கூடாதா என்றார் சஞ்சய் தத்.

பேட்டியின்போது உடன் இருந்த அமர்சிங், சஞ்சய் தத் காங்கிரஸ் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பினால் அவரை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோல கட்டாயம் போட்டியிட வேண்டும் எனவும் நாங்கள் அவரை வற்புறுத்த மாட்டோம் என்றார்.

பேட்டியின்போது அமர்சிங்கை தனது அண்ணன் என்று பாசத்துடன் அழைத்தார் சஞ்சய் தத்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.