தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: காங்.குக்கு திருமாவளவன் எச்சரிக்கை

சென்னை: இலங்கை அரசை மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்தாவிட்டால் தமிழகத்தில் மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

 

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவி்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அருகே மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் திருமாவளவன்.

இந்தப் போராட்டத்தை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

பெரும் திரளான தொண்டர்களுடன் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

உண்ணாவிரதத்தைத் தொடங்கி அவர் பேசுகையில், கொத்து வெடிகுண்டுகளைப் போட்டு தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது இலங்கைப் படை. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இறந்தும் வருகின்றனர்.

தமிழர்கள் அமைதியாக வாழ முதலில் அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். போரை இலங்கை அரசு நிறுத்துவதற்கு, மத்திய அரசு உடனடி முயற்சி எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தி வருகிறோம்.

ஆனால் போரை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. போரை நிறுத்தி விட்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை முன்வர வேண்டும். இதை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி விட்டோம். சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று மனுவும் கொடுத்து விட்டோம்.

85 வயதான தமிழகத்தின் முதல் அமைச்சர் பிரதமரை நேரில் சென்று வற்புறுத்தியிருக்கிறார். இதன் பலனாக தற்போது வெளியுறவுத்துறை செயலாளரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டில் தக்க சமயத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தியதால், இந்திய கிரிக்கெட் அணியை இந்திய அரசு பாகிஸ்தான் போக அனுமதிக்கவில்லை. அதேபோல தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கைக்குக் கண்டனம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு போகக் கூடாது என்றார் திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published.