அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 6வது ஊதியக் குழு நிலுவை தொகை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு வழங்கியுள்ள புதிய ஊதிய விகிதம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் இக்குழுவைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்ய இக்குழுவிற்கு மேலும் மூன்று மாத கால நீட்டிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி முடித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களையும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு,

இவர்கள் அனைவருக்கும் இடைக்கால நிலுவைத் தொகையை உடனடியாக அளித்திட அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி 1.1.2009 வரை இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளோர்க்கு மூன்று மாத ஊதியமும்,

1.1.2009 வரை இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணி புரிந்துள்ளோருக்கு ஒரு மாத ஊதியமும்,

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு மூன்று மாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் இடைக்கால நிலுவைத் தொகையாக அளிக்கப்படும்.

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் குழு ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறுவோருக்கும், சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணி புரிவோருக்கும் இது பொருந்தும்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் நிலையான ஊதியம் பெறுவோருக்கும் இதே பணிக்கால அடிப்படையில் இடைக்கால நிலுவைத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் தொகை, அரசால் நிர்ணயிக்கப்படும் திருத்திய ஊதிய விகிதம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தின் படி கணக்கிடப்படும் நிலுவைத் தொகையில் சரிக்கட்டப்படும்.

இந்த இடைக்கால நிலுவைத் தொகை வழங்கப்படுவதால் அரசுக்கு ரூ.4,247 கோடி கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.