சத்யம் என்ஜிஓ அமைப்பிலிருந்து கலாம் விலகல்!

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் வணிக நோக்கமற்ற அமைப்புகளில் ஒன்றான ‘நெருக்கடி நிர்வாக ஆராய்ச்சி நிலைய’த்தின் (Emergency Management Research Institute) நிர்வாகக் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

சத்யம் முன்னாள் சேர்மன் ராமலிக ராஜு உருவாக்கிய லாபநோக்கற்ற ஒரு அமைப்பு இது.

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாகி கே.வி.காமத், சிஐஐ நிறுவனர் தாருண், ஹார்வர்டு வணிகப் பள்ளியின் கிருஷ்ணா பாலேப்பு, சத்யம் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகியும் ராமலிங்க ராஜுவின் தம்பியுமான ராமராஜு மற்றும் நாஸ்காமின் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் ஆகியோரும் இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் இருந்தனர். இதன் தலைவராக ராமலிங்க ராஜு இருந்தார்.

ராமலிங்க ராஜுவும் ராமராஜுவும் ஏற்கனவே இந்த நிர்வாகத்திலிருந்து விலகி சிறையில் உள்ள நிலையில், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ளனர். தற்போது கூடவிருக்கும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்தக் கடிதங்கள் குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்த அமைப்பு 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நெருக்கடியான கால கட்டங்களில் உதவுவது இந்த அமைப்பின் நோக்கம். ஆந்திரா, குஜராத், கோவா, உத்தராஞ்சல் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.