லாரி ஸ்டிரைக் எதிரொலி : கரும்பு அரவை நிறுத்தம்

posted in: தமிழ்நாடு | 0

கள்ளக்குறிச்சி : லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருவதால் காகித ஆலையில் நீராவி உற்பத்தி பாதித்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எண்.2 உள்ளது. சர்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் உள்ளது. காகித நிறுவனத்தில் சர்க்கரை ஆலை இயங்கத் தேவையான நீராவியை உற்பத்தி செய்து கொடுத்து அதற்குப் பதிலாக பெக்காஸ் (கரும்புச் சக்கை) காகிதம் தயாரிக்க வாங்கிக் கொள்கின்றனர்.

லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வரும் நிலையில் காகித நிறுவனம் இயங்க நிலக்கரி வரத்து தடைபட்டது. இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் நீராவி தயாரித்து சர்க்கரை ஆலைக்கு வழங்கினர். நிலக்கரி 11ம் தேதி இரவு தீர்ந்தது. இதனால், நீராவி உற்பத்தி பாதித்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையும் நிறுத்தப்பட்டது. கட்டிங் ஆர்டர் உத்தரவும் நிறுத்தப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த டிச., 3ம் தேதி அரவை துவங்கியது. இந்த ஆண்டு, 4 லட்சத்து 35 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி வரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 91 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் முடிந்தால் தான் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கும். மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் மூலம் நீராவி வழங்கி வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.