ஸ்டிரைக் வாபஸ்: லாரிகள் இன்று முதல் ஓடும்

கடந்த எட்டு நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம், நேற்று இரவில் இருந்து வாபஸ் பெறப்பட்டது. இன்றிலிருந்து லாரிகள் முழுவதுமாக ஓடத் துவங்கும். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளும், அனைத் திந்திய மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பலமணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று மாலை ஒப்பந்தம் ஏற்பட்டது.


இந்த ஒப்பந்தம் மத்திய சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு முன்னிலையில், அமைச்சகத்தின் துணைச்செயலர் எஸ்.கே.டேஷ், அனைத்திந்திய மோட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் குரீந்தர்சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன், மத்திய அமைச்சர் பாலு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்களுடன் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். லாரி உரிமையாளர்களின் பல கோரிக்கைளை மாநில அரசுகள் பரிசீலனை செய்து முடிவு செய்ய வேண்டும். ஆகவே, இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், நிருபர்களிடம் பாலு பேசியதாவது: மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளுக்கு விதிக்கப்படும் சாலை வரி(டோல் டாக்ஸ்), ஒரு ஆண்டுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 2007ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அன்று அமலுக்கு வந்த லாரிகளின் சாலை வரிக் கட்டணங்கள், 2009ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி வரை தொடரும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்ற லாரி உரிமையாளர்களின் கோரிக் கையை மத்திய அரசும், அமைச்சரவையும் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும். லாரி உரிமையாளர்களின் அடுத்த கோரிக்கையான தேசிய உரிமங்கள் வழங்குவது குறித்தும், லாரிகளின் மீது விதிக்கப்படும் பல்வேறு வரிகளை சீரமைப்பதற்கும் மத்திய சாலைத்துறைச் செயலர் பிரம்மதத் தலைமையில் ஒரு குழு அமைக்கப் படும்.

இந்தக் குழுவில் லாரி உரிமையாளர்களும், அவர்களின் சங்க பிரதிநிதிகளும் இடம் பெறுவர். இந்தக் குழு எட்டு வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கும். தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி, கைது செய்யப்பட்ட 32 லாரி உரிமையாளர்களும், சங்கங்களின் பிரதிநிதிகளும் உடனடியாக விடுவிக்கப்படுவர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு விட்டனர். ஆகவே, இந்த சங்க பிரதிநிதிகளை உடனடியாக விடுதலை செய்ய தனது அமைச்சகம் எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கும். இவ்வாறு பாலு தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.