லாரி ஸ்டிரைக்கால் வெல்லம் விலை வீழ்ச்சி

சேலம்: லாரி ஸ்டிரைக் காரணமாக, வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சீசன் நேரத்தில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பில் கணிசமான பகுதி, வெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி கூடங்கள் செயல்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சேலம் செவ்வாய் பேட்டை, ப.வேலூர் பிலிக்கல்பாளையம், ஈரோடு மாவட்டம் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக, பொங்கல் பண்டிகை காலத்தில், வெல்லம் விலை உயரும். அந்த சீசனை எதிர் பார்த்து, வெல்லம் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் காத்திருப்பர். நிறைய ஸ்டாக் வைத்திருப்பர். இந்தாண்டு லாரி ஸ்டிரைக் காரணமாக, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக ஸ்டிரைக் தொடர்வதால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், நாட்டின் பிற மாநிலங்களுக்கும், வெல்லம் விற்பனைக்கு அனுப்பப்படுவது, முற்றிலும் தடைபட்டுள்ளது. அதிகம் உற்பத்தியான நிலையில், விற்பனையின்றி வெல்லம் தேங்கியுள்ளதால், விலை சரிய துவங்கியுள்ளது. சேலம் வெல்ல மார்க் கெட்டில், உருண்டை வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாயும், மூட்டைக்கு 50 முதல் 70 ரூபாய் வரையும் விலை குறைந்துள்ளது. நேற்று, சேலம் வெல்ல மார்க்கெட்டில், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்ல மூட்டை 370 முதல் 420 ரூபாய்க்கும், கிலோ 12 முதல் 13 ரூபாய் வரை விற்றது. நாட்டுச் சர்க்கரை மூட்டை 420 முதல் 500 ரூபாய் வரை விற்றது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.