லசந்தவின் படுகொலையை சர்வதேச சதி என்றும் , புலிகள் மீது குற்றம் சுமத்தியும் படுகொலை விவகாரத்தில் அரசு தப்பிக்க முடியாது: – ஊடகங்களிடம் சந்திரிகா கருத்துரைப்பு.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும்.

இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இங்கு மேலும் கூறுகையில், எமது நாட்டில் ஊடக சுதந்திரம் மிகவும் பாதிப்படைத்திருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிரச ஊடக நிறுவனம் தாக்கியழிக்கப்பட்டது. அதன்பின் தற்போது சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இல்லாது இதற்கு முன்னரும் பல்வேறு ஊடக அடக்கு முறைகள் நடந்தேறியுள்ளன. யாழ்ப்பாணத்திலும் இதுபோன்று பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவையனைத்தையும் நடத்திவிட்டு இறுதியில் சர்வதேச சதி என்று கூறப்படுகின்றது. அத்துடன் இந்த கொலைகளுக்கு பொறுப்பாளி புலிகளே என்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடக அடக்குமுறைக்கும் படுகொலைகளுக்கும் இன்றைய அரசாங்கமே பதில் கூறவேண்டும். இதில் இருந்து தப்பிச் செல்ல முடியாது. ஏனெனில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நூற்றுக்கு நூறு வீதம் அரசாங்கத்தினுடையது.

தற்போது புலிகளையும் அவர்களது தலைவர் பிரபாகரனையும் ஓரம்கட்ட முடியுமானால் ஏன் இவ்வாறு பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை ஓரம்கட்ட முடியாதிருக்கின்றது என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன்.

இந்த படுகொலைகள், ஊடக அடக்கு முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வெறுமனே எல்லாவற்றுக்கும் புலிகளை குற்றம் சுமத்த முடியாது, கடந்த 3 வருடங்களில் எனது பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வாறு கருத்துக் கூறுவதால் நாளை எனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எது எவ்வாறிருப்பினும் உண்மை நிலையை பேசியே ஆகவேண்டும்.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.