அமெரிக்கா மீதான ஒரு தாக்குதலை ஒபாமா எதிர்கொள்ள நேரிடலாம்: புஷ் எச்சரிக்கை

அமெரிக்காவில் தனக்கு அடுத்து அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா அவர்கள், நாட்டின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்படக் கூடிய ஒரு அபாயத்தை மிகவும் அவசரமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியை பராக் ஒபாமா அவர்களிடம் ஒப்படைக்கும் முன்னதாக தான் பங்கு பெறும் கடைசி செய்தியாளர்கள் கூட்டத்திலேயே புஷ் அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட தீய நாடுகளின் கூட்டணி என்று புஷ் அவர்களால் கூறப்படும் நாடுகள் இன்னமும் ஆபத்தானவை என்றும் செய்தியாளர்களிடையே புஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காசாவில் நிலவும் நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட புஷ் அவர்கள், அங்கு நீடித்திருக்கக் கூடிய ஒரு போர்நிறுத்தம் அவசியம் என்று கூறியுள்ளார். எனினும் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவுவதை நிறுத்த ஒப்புக் கொண்டால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார பின்னடைவு குறித்தும் கருத்து கூறிய அமெரிக்க அதிபர், அமெரிக்காவின் நிதி நிலைமகளை சரிசெய்யும் முகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் 700 பில்லியன் டாலர்களிலிருந்து இரண்டாவது தொகுதியை விடுவிக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கோர தான் சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.