இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி பாரதி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெமோரியல் மண்டபம் அருகே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார்.

தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், தமிழக பொது செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உரையாற்றியதாவது:

இலங்கையில் தமிழர்கள் நாளாந்தம் கொல்லப்பட்டு வருகின்றனர். அவர்கள் படும் துன்பம் சொல்லி மாளவில்லை. இது தொடர்பாக மத்திய அரசிடம் எவ்வளவு சொல்லியும் நடவடிக்கையில்லை. பிரதமர் வாக்கு கொடுத்த பிறகும் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா செல்லவில்லை. அவர் செல்வாரா என்பதும் தெரியவில்லை.

கிளிநொச்சியில் இருந்து 11/2 லட்சம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு துணைபோகிறது. இந்த நிலை மாற வேண்டும். மத்திய அரசு தலையிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி காண வேண்டும் என்றார் அவர்.

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல. கணேசன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் இருக்கிறது. அங்கே வாழும் இந்துக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இது இலங்கை பிரச்சினை அல்ல. இந்திய பிரச்சினை. இதை நாடு எங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலங்கை பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

அமைதி வழிக்கு இரண்டு வழிகளில் தீர்வு காண முடியும். ஒன்று போரை நிறுத்தினால் அமைதி கிடைக்கும். மற்றொன்று சுடுகாட்டு போகும் படி செய்தால் அமைதி கிடைக்கும். இதில் எந்த வழியில் மத்திய அரசு எங்களுக்கு உதவ போகிறது என்று தெரியவில்லை. இது இந்திய நாட்டின் 100 கோடி மக்களின் பிரச்சினையாக கருதி விரைவில் ஒரு நல்ல முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் இலங்கையில் எந்த தமிழரும் கொல்லப்படவில்லை. இலங்கை நாட்டில் இந்தியா நாட்டு கப்பல் படைகள் சுற்றி வரவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையை இந்திய நாட்டு கப்பல் படை காவல் காத்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும் என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.