உடனடி போர் நிறுத்தம் கோரி நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம்

சிங்களப் பேரினவாதத்தின் பெருமெடுப்பிலான வல்வளைப்பு போரினை உடனடியாக நிறுத்தக் கோரி நோர்வே தமிழ் மக்களால் அவசர கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக இன்று செவ்வாய்கிழமை 2:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவ இயந்திரத்தின் பெருமெடுப்பிலான போர் முன்னெடுப்பினால் தமிழீழ மக்கள் பெரும் மனிதாபிமான அவலத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளாந்தம் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கொடுமையான இனப்படுகொலையை புரிந்து வருகின்றது

எனவே, சிறிலங்கா இராணுவத்தின் வல்வளைப்பினால் ஏற்படக்கூடிய பாரிய மனிதப் பேரழிவினை, இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்பதை வலியுறுத்தியும், நோர்வே அரசு மற்றும் அனைத்துலக சமூகம் தலையிட்டு சிறிலங்கா அரசினை போரை நிறுத்துமாறு உடனடியாக கோர வேண்டும் என்றும் கவனயீர்ப்பு மூலம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, இந்திய மத்திய அரசின் ஊடாக சிறிலங்கா அரசிற்கு தொடர் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என தமிழக மக்களையும் உரிமையோடு நோர்வே வாழ் தமிழ் மக்கள் வேண்டி நிற்பதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.