தாவூத் இப்ராகிம் தங்கைக்கு மத்திய அரசு பாஸ்போர்ட் மறுப்பு

டெல்லி: தாதா தாவூத் இப்ராகிமின் தங்கை ஹசீனா இப்ராகிம் பார்க்கருக்கு இந்திய அரசு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டது. அவர் மீது கடத்தல் வழக்கு உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக படு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் தாவூத் இப்ராகிம். ஆனால் பிறப்பில் தாவூத் ஒரு இந்தியர்.

அவரது சகோதரி ஹசீனா இப்ராகிம் பார்க்கர் மும்பையில் வசித்து வருகிறார். அண்ணன் வழியில் தங்கையும் தன்னால் முடிந்த சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஹசீனா மீது மும்பை போலீஸார் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். குடிசைவாசிகளுக்கான மறு வாழ்வுக்காக தரப்பட்ட ரூ. 1 கோடிப் பணத்தை ஹசீனா துக்கி வைத்துக் கொண்டதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், மும்பை போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஹசீனாவுக்கும், அவரது கூட்டாளிக்கும் அதே ஆண்டு மே மாதம் மும்பை கோர்ட் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்காக பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார் ஹசீனா. ஆனால் அதை விசாரித்த பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் வழங்க முடியாது. அப்படி வழங்கினால், ஹசீனா நாடு திரும்ப மாட்டார் என்று கூறி மறுத்து விட்டது.

இதையடுத்து தற்போது டெல்லியில் தங்கியுள்ள ஹசீனா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரவீந்தர் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பி்ல் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் துபே, மும்பையில், ஹசீனா மீது மிரட்டிப் பணம் பறித்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு பாஸ்போர்ட் அளிக்க முடியாது.

மேலும் இதுதொடர்பாக விரிவான பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.