லாரிகள் ஸ்டிரைக்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குங்கள்*மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் * சவாலை சந்திக்க உரிமையாளர்களும் தயார்

டில்லி:லாரி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால், ஏழாவது நாளாக நேற்றும் லாரி ஸ்டிரைக் தொடர்ந்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் ஸ்டிரைக்கை அதிரடியாக முடிவுக்குக் கொண்டு வந்தது போல, லாரி ஸ்டிரைக்கையும் முடிவுக்குக் கொண்டுவர அதிரடியாக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


ஆனால், மத்திய அரசின் சவாலைச் சந்திக்க லாரி உரிமையாளர்கள் தயாராக உள்ளனர். கைதான தலைவர்களை விடுவிக்கும் வரை, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.ஒரு வாரமாக தொடரும் லாரி ஸ்டிரைக்கால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

சரக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் மற்றொரு பகுதிக்குப் பொருட்களைக் கொண்டு செல்வது தடைபட்டு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. இரும்புக்கரம்: இந்நிலையில், மத்திய கேபினட் செயலர் சந்திரசேகர் அனைத்து மாநிலங்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், பற்றாக்குறையைப் பயன்படுத்தி சிலர் பதுக்கலில் ஈடுபட்டு, கொள்ளை லாபம் அடிக்க முற்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டுள்ளார்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் போராட்டத்தின் போது, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்ததால், உடனடியாக பிரச்னை முடிவுக்கு வந்தது.எனவே, அதே பாணியில் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க சில மாநில அரசுகள், “எஸ்மா’ சட்டத்தை அமல்படுத்தியது போல, மற்ற மாநிலங்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இவ்வாறு கூறினார்.கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஸ்டிரைக் சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலர் பதுக்கலில் ஈடுபடலாம். அதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வினியோகம், போக்குவரத்து, கொள்முதல் போன்றவை சீராக நடப்பதையும், ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவை முறையாக வினியோகிக்கப்படுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். லாரி ஸ்டிரைக்கை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள் ளது என்பதை பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், நாட்டின் சில பகுதிகளில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, போக்குவரத்தை துவக்கி விட்டதாகவும், மேலும் பல சங்கங்கள் விரைவில் போராட்டத்தைக் கைவிடும் என்றும் மத்திய அரசின் போக்குவரத்துத் துறைச் செயலர் பிரேமதத் கூறியுள்ளார். இப்படித் துவங்கப்பட்ட லாரி போக்குவரத்து மாநிலங்களுக்கு உள்ளே மட்டும் தான் நடக்கிறது. மாநிலங்களுக்கு இடையே நடக்க வில்லை. தொழிற்சாலைப் பொருட்களின் போக்குவரத்து துவங்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், டில்லி, உ.பி., ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கோவா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து நேற்று அரியானா மாநில அரசும் அத்தியாவசியச் சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) அமல்படுத்தியது.சவால்: மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசின் சவாலைச் சந்திக்க லாரி உரிமையாளர்களும் தயாராகி வருகின்றனர். ”

அரசு அறிவித்தபடி, நாட்டின் எந்தப் பகுதியிலும் லாரி போக்குவரத்து துவங்கவில்லை. எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை லாரிகள் இயங்காது.கைது செய்யப்பட்ட எங்கள் சங்கங்களின் தலைவர்களையும் விடுவிக்க வேண்டும்’ என, அகில இந்திய டிரான்ஸ் போர்ட்டர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.தேசிய அளவில் முழு அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது என்றும் சங்கத்தின் தலைவர் ரமேஷ் அகர்வால் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.