இடம்பெயரும் வன்னி மக்கள் மீது சிறிலங்கா முப்படையினரும் கூட்டுத்தாக்குதல்: பெண் பலி; 60 பேர் காயம்

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதில் அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

வடமராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா வான், கடல், தரைப்படையினரும் கூட்டாக இணைந்து இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து செறிவான தாக்குதலை நடத்தினர்.

இடம்பெயரும் மக்களை அவலப்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளனர்.
இதில் 40 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் கல்லாறு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு தேராவில் மேற்குப் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் வாழ்விடத்தை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

படையினரின் மிலேச்சத்தனமான இத்தாக்குதலில்

மரியதாஸ் அந்தோனி (வயது 85)
பொன்னம்மா (வயது 75)
ரமேஸ்குமார் சஞ்சீவன் (வயது இரண்டரை)
செல்வராசா தர்சிகா (வயது 15)
ஆ.பிரமிலன் (வயது 17)
ம.சண்முகலிங்கம்
ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனைய நான்கு பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மற்றைய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தருமபுரம் தெற்குப் பகுதியில் இன்று காலை முதல் சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த மற்றும் நிலையான மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் சுண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலிலும் வான்குண்டுத் தாக்குதலிலும் பொதுமக்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.