விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது: தா.பாண்டியன்

இலங்கையில் தனி ஈழம் கோரி 30 ஆண்டுகளாகப் போராடிவரும் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர்க் குழு சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகத்தை தா.பாண்டியன் திறந்துவைத்து பேசியதாவது:

மக்களின் ஆதரவின்றி ஓர் இயக்கம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது. ஆகவே, விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் சிங்களர்கள் ஒரு கோடி பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், தமிழர்கள் 35 லட்சம் பேர்தான் உள்ளனர். அதற்குக் காரணம் பலர் போரில் இறந்து விட்டனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் எனப் பத்திரிகைகள் வாயிலாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தாலே போதும். அங்கு அமைதி திரும்பி விடும்.

டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்தபோது, இதே கருத்தை நான் வலியுறுத்தினேன். அதற்கு பிரதமர் “நல்ல யோசனை’ என்றார்.

ஆனால், அதன்பிறகு இலங்கைப் போரை நிறுத்த, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.