வன்னி்யில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 7 பேர் பலி : 6 பேர் காயம்; சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பு

வன்னி்யில் தொடரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் வாழ்க்கை கஸ்ட நிலைமை காரணமாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்தபோது வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 7 பொதுமக்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் மூலமாக இராணுவம் ஒப்படைத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் ஊரியான் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சி..மகாலட்சும் (54) என்பவர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரியான ஆர்.தங்கமணி (58), அவரது மகளாகிய ஆர்.ராணிமலர் (33) மற்றும் நடராசா சிவநேசன், சுப்பிரமணியம் பிரகாஷ், வினாயகமூர்த்தி விஜிதகுமார் (10)ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு வட்டக்கச்சியில் இருந்து கல்மடு என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் வட்டக்கச்சிக்கு மாடுகளைப் பார்க்கச் சென்றபோது, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்து இராணுவத்தினரால் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட சிவகுரு மகேந்திரன் என்பவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற வவுனியா மாவட்ட நீதிபதி அலெக்ஸ் ராஜா காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு நடந்த சம்பவம் பற்றி விசாரித்தறிந்தார். அத்துடன் இறந்தவர்களின் உடல்களையும் பார்வையிட்டு விசாரணைகள் நடத்தினார். நீதிபதியின் உத்தரவுக்கமைய பொலிசார் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களிடம், அவர்களுக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்வம் பற்றி விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் தொடரும் ஷெல் தாக்குதல், விமானக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் முடிவற்ற இடப்பெயர்வு, வாழ்க்கை கஸ்டம் காரணமாக தாங்கள் 55 பேர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்காகப் புறப்பட்டு நடந்து வந்தபோது சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஊரியான் பகுதியில் தங்கள் மீது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் பொலிசாரிடமும், நீதிபதியிடமும் தெரிவித்துள்ளார்கள்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது இருள் நேரமானபடியால் தங்களுக்குத் தெரியவில்லை என காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டினால், காயமடைந்தவர்கள் நிலத்தில் வீழ்ந்ததும், அனைவரும் சத்தமிட்டு கத்தி குளறியதையடுத்து, அங்கு வந்த இராணுவத்தினர் காயமடைந்வர்களைத் தூக்கி கிளிநொச்சி நகரில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று, முதலுதவியளித்து பின்னர், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனையோர் வவுனியா நெளுக்குளத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்ககப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.