திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு : பறவை மோதலை தவிர்க்க ஆறு முறை பறந்த விமானம்

posted in: தமிழ்நாடு | 0

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ஏர்-ஆசியா விமானம் தரையிறங்க முயன்ற போது, பறவை மோத இருந்ததை விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு தவிர்த்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூர்- திருச்சி இடையே ஏர்-ஆசியா என்ற தனியார் விமான நிறுவனம், விமானங்களை இயக்கி வருகிறது. அந்த விமானம் தினமும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும். அதன் பின், காலை 9.55 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டுச் செல்லும்.

நேற்று வழக்கம் போல் காலை 8.50 மணிக்கு 174 பயணிகளுடன் திருச்சி வான் பகுதிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிகள் அனுமதியுடன் ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். அப்போது, கழுகு வகையைச் சேர்ந்த பறவை ஒன்று, விமானத்தின் மீது மோதுவது போல் வந்தது. அதை பார்த்த விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு, விமானத்தை வானத்தை நோக்கி மேலே செலுத்தினார்.

தொடர்ந்து பறவை ஓடுபாதை அருகே பறந்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க முடியாமல் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, திருச்சி வான் பகுதியில் ஏர்-ஆசியா விமானம் காலை 9.15 மணி வரை ஆறு முறை சுற்றி சுற்றி பறந்து கொண்டிருந்தது. பறவை நீண்ட தூரம் பறந்து சென்ற பிறகே, காலை 9.20 மணிக்கு விமானத்தை விமானி தரையிறக்கினார். பறவை மோதியிருந்தால், விமான இன்ஜின் பழுது ஏற்பட்டு, 174 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். விமானியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.