பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : முரளி தியோரா

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஓரிரு வாரங்களில் குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :

இன்னும் ஓரிரு வாரங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., சமையல் காஸ் விலை குறைக்கப்படும். காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 25ரூபாயும் , பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக இருந்தது. இது தற்போது பேரல் ஒன்றுக்கு 40 டாலர் வரை குறைந்துள்ளது. இந்த சரிவை கருத்தில் கொண்டும் எண்ணெய் நிறுவனங்கள் அடையும் லாபத்தை கணக்கில் கொண்டும் பெட்ரோல், டீசல், மற்றும் காஸ் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dianmalar.com

Leave a Reply

Your email address will not be published.