இஸ்ரேலை கண்டிக்கும் நாடுகள் சிறிலங்காவை கண்டிக்காதது ஏன்?: “நிலவரம்” ஆசிரியர் தலையங்கம்

பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கும் அனைத்துலக நாடுகள், இஸ்ரேலைப் போலவே தமிழீழப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவை கண்டிக்காதது ஏன் என்று “நிலவரம்” ஏடு கேள்வி எழுப்பியுள்ளது.

சுவிசில் இருந்து வெளிவரும் “நிலவரம்” மாத இருமுறை ஏட்டின் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையையும் அதில் அளவுக்கு அதிகமான பலப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதையும் உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இதற்கெனத் தனி விவாதம் நடாத்தப்பட்டு வருகின்றது.

பாலஸ்தீன மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்பவர்கள். அவர்களது நிலம் ஏற்கனவே இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 27 முதல் நடைபெற்று வரும் வான் குண்டுவீச்சுக்களும், அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தரைவழி இராணுவ நடவடிக்கைகளும் இரண்டாவது ஆக்கிரமிப்பாக அமைந்துள்ளன.

‘தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்பதைப் போன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கட்டுப்பாடற்ற ஆதரவைக் கொண்டுள்ள இஸ்ரேல், தனது செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது அடாவடித்தனத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அனைத்துலக போர் விதிகளுக்கு முரணாக பாடசாலைகள், மத வழிபாட்டு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஐ.நா. சபையால் நிர்வகிக்கப்படும் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் பிள்ளைகள், பெண்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை பற்றி கவலைப்படாத இஸ்ரேல் தனது தாக்குதல்களை மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து வருகின்றது. காசா பிரதேசத்தை பல மாதங்களாக பொருளாதார முற்றுகைக்குள் வைத்திருக்கும் இஸ்ரேல், எகிப்து நாட்டு எல்லையில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்காகத் தோண்டப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளைக் கண்டு பிடித்து அழித்து வருகின்றது.

இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் காசா பகுதிக்குள் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கியிருந்தும் கூட அதனை மதித்து நடக்க இஸ்ரேல் முன்வரவில்லை.

இஸ்ரேல் காசா பகுதியில் எத்தகைய அராஜகத்தைப் புரிந்து வருகின்றதோ அதற்குச் சற்றும் சளைக்காத வகையில் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் தமிழர் தாயகத்தில் அராஜகம் புரிந்து வருகின்றன. குடிமக்கள் மீதான வான் குண்டுத் தாக்குதல்கள், பாடசாலைகள், வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெயர்ந்த மக்கள் மீதான கொத்தணிக் குண்டுத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை, மீன்பிடித் தடை என வகை தொகையற்ற தடைகள் இதுதவிர சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், காணாமற் போதல்கள், கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு, ஊடக அடக்குமுறை என சகலவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை சிங்கள தேசம் நடாத்தி வருகின்றது.

காசா மீதான இஸ்ரேலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் உலக நாடுகளோ, ஐ.நா. சபையோ சிங்கள தேசத்தைக் கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ முன்வரவில்லை. மாறாக ஒரு சில நாடுகள் சிங்களத்தின் இன ஒழிப்புப் போருக்கு நேரடி மற்றும் மறைமுக பொருண்மிய, படைத்துறை உதவிகளை நல்கி வருகின்றன.

ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை? புரியவில்லை. காசாவில் உள்ள மக்களே மக்கள் தமிழர்கள் மக்களில்லை என்பதா? அல்லது கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்பதுவா?

இத்தனைக்கும் தமிழர் தாயகத்தில் அட்டூழியம் புரியும் சிங்களப் படைகள் இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் வானூர்தியில் பறந்துதான் தடைசெய்யப்பட்ட ரஸ்யத் தயாரிப்பான கொத்துக் குண்டுகளை வீசி வருகின்றன. சிங்களக் கடற்படையினர் இஸ்ரேலியத் தயாரிப்பான டோரா படகுகளில் வந்துதானே கடற்றொழிலாளர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

காசாவில் உள்ள மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அங்கே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரி வரும் அனைத்துலக சமூகம் ஏன் தமிழர் தாயகத்தில் நடைபெறும் அராஜகத்தை மட்டும் கண்கொண்டு பாராமல் உள்ளது?

ஒத்த தன்மையுள்ள இரண்டு சமூகங்கள் விடயத்தில் இரட்டை அணுகுமுறையினை அனைத்துலக சமூகம் கடைப்பிடிக்குமானால் அறிவுரை கூறும் தகுதியை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். இது பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.