அகில இந்திய லாரி சங்க தலைவர் கைது : ஸ்டிரைக்கை முறியடிக்க திட்டம்

புதுடில்லி : லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத் தத்தின் ஐந்தாவது நாளான நேற்று, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சரண் சிங் லோகாரா மற்றும் அதன் பொதுச் செயலர் எஸ்.வேணுகோபாலை போலீசார் கைது செய்தனர். எனினும், வேலை நிறுத்தம் தொடரும் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய அதன் முன்னாள் தலைவர் ஓ.பி. அகர்வால் கூறியதாவது: அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சரண் சிங் லோகாரா, பொதுச் செயலர் எஸ். வேணுகோபால் மற்றும் ஆந்திரா, குஜராத், கர்நாடகா உட்பட மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இவ்வமைப்பின் 30 உறுப்பினர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். எனினும், அரசு எங்கள் கோரிக் கைகளை ஏற்றுக்கொள்ளும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இவ்வாறு அகர்வால் கூறினார்.


அதற்கு முன்னதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களை “எஸ்மா’ என்ற அத்யாவசியத் தேவை பராமரிப்புச் சட்டத்தில் கைது செய்யப் போவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க, அடுத்த சில நாட்களில் 15 லட்சம் முதல் 20 லட்சம் வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தது.

இதற்காக லாரிகளைப் பறிமுதல் செய்தும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல தனியார் வாகனங்களை பெர்மிட் இல்லாமல் இயக்க அனுமதி வழங்கியும் போக்குவரத்திற்கான வாகனங்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துச் செயலர் பிரகாம் தத் கூறுகையில், “அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க, நாங்கள் அடுத்த சில நாட்களில் 15 லட்சம் முதல் 20 லட்சம் வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், “லாரி உரிமையாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் மாநில அரசுடன் தொடர்புடையதாக இருப்பதால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தீர்வு காண்பதற்காக, மத்திய அரசு, மாநில அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறது’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.