பணிந்தது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் : வேலைநிறுத்தம் வாபஸ்

புதுடில்லி : மத்திய அரசின் கண்டிப்பான நடவடிக்கையால், கடந்த புதன்கிழமையில் இருந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் ( ஓ எஸ் ஓ ஏ ) நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

வேலைநிறுத்தத்தை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை, அதற்கு முன் பேச்சுவார்த்தை இல்லை என்று மத்திய அமைச்சரவை கண்டிப்பாக சொல்லி விட்டதாலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி பிரதமர் மன்மோகன் சிங் இட்ட கண்டிப்பான உத்தரவாலும், பொது மக்களின் கடும் எதிர்ப்பாலும் தாக்குபிடிக்க முடியாத வேலை நிறுத்த போராட்டம் நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரை எஸ்மா சட்டப்படி கைது செய்து சிரையில் அடைக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்ததாலும், அவர்கள் மீது துறை மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாலும், நிலைமையை சமாளிக்க ராணுவம் வரவழைக்கப்படுமே ஒழிய, போராட்டத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று திட்டவட்டமாக மத்திய அமைச்சரவை சொல்லி விட்டதாலும் வேறு வழியின்றி போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த 14 நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மாலையில் முதலில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது பாரத் பெட்ரோலியமும் ஆயில் இந்தியா லிமிடெட்டும்தான். அடுத்ததாக இந்தியன் ஆயில் கார்பரேஷனும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா விலகிக்கொள்வதாக அறிவித்தது. பின்னர் கடைசியாக ஓ.என்.ஜி.சி., அறிவித்தது. ஓ.என்.ஜி.சி.,யில்தான் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்க ( ஓ எஸ் ஓ ஏ ) தலைவர் அமித் குமார் வேலைபார்க்கிறார். போராட்டம் வாபஸ் குறித்து பின்னர் பேசிய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, போராட்டத்தை வாபஸ் பெற வைக்க சில நாட்கள் ஆனது வருத்தம் அளிக்கிறது என்றார்.எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எல்லோரும் வேலைக்கு திரும்ப ஒத்துக்கொண்டனர். ஹெச்.பி.சி.எல்., ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., மற்றும் ஓ.என்.ஜி.சி.,நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்த்து நிலைமையை சரி செய்வார்கள். இருந்தாலும் நிலைமை முழுவதுமாக சீரடைய ஒரிரு நாட்கள் ஆகலாம் என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.