புலிகளை ஆதரித்து பேசிய இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டைரக்டர் சீமானின் ஜாமீன் மனு இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கருங்கல்பாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களை ஜாமீனில் விடக்கோரி ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பொலிஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 26 ந்தேதி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் தரப்பில் ஜாமீன் கேட்டு வக்கீல் பா.பா.மோகன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் டைரக்டர் சீமான் உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி ஈரோடு மாவட்ட செசன்சு கோர்ட்டில் வக்கீல் பா.பா.மோகன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று 9 ந்தேதி நடந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி ஏ.எஸ்.கண்ணன், டைரக்டர் சீமான் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.